விழுப்புரம் அருகே கோழிப்பண்ணைக்கு தீ வைப்பு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் அருகே கோழிப்பண்ணையை தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-07-07 22:15 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் அருகே திருப்பாச்சனூரை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவர் அதே கிராமத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்த பண்ணையில் 4 ஆயிரம் கோழிகளை வளர்த்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கோழிகளை ஒரு லாரியில் ஏற்றி சென்னையில் உள்ள கறிக்கோழி பண்ணைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்தார்.


இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இவருடைய கோழிப்பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய இந்த தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து உடனே முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெய்சங்கர் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கோழிப்பண்ணை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.


இந்த தீ விபத்தில் பண்ணையில் இருந்த கோழி தீவனங்கள், மின் மோட்டார்கள், பிளாஸ்டிக் பொருட்கள் சேதமடைந்தது. இதன் சேத மதிப்பு ரூ.2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து முருகன், விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் தன்னுடைய கோழிப்பண்ணைக்கு தீ வைத்து விட்டதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்