தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய பஸ் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பஸ்சை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-07 22:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பஸ்சை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதிய பஸ்

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பஸ் இயக்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தானியங்கி கதவுகள்

தமிழக முதல்–அமைச்சர், மக்கள் அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்று அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், ரூ.134 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் 515 புதிய பஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடக்கி வைத்தார். அதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்திலும் 15 புதிய பஸ்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

அதேபோல் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில், 100 பஸ்கள் சுமார் ரூ.40.36 கோடி செலவில் இயக்கப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக, 40 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் குளிர்சாதன வசதி மற்றும் படுக்கை வசதி கொண்ட 2 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. தினசரி இரவு 8 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும், அதேபோல் இரவு 8 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கும் பஸ்கள் இயங்கும். இதில், பயணிகளின் பாதுகாப்பிற்காக அவசர நிலை கதவு, தானியங்கி கதவுகள் ஒவ்வொரு இருக்கையிலும் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. தூத்துக்குடி பணிமனை மூலம் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இயக்கப்படும் 66 பஸ்கள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.17.35 லட்சம் வசூல் ஈட்டப்பட்டு வருகிறது. இன்று (அதாவது நேற்று) தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு குளிர்சாதன மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ் இயக்கப்பட்டு உள்ளது.

அனல்மின்நிலையம்

உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 13 ஆயிரத்து 510 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது 15 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மின்மிகை மாநிலமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான்வர்க்கீஸ், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மணி, வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், துணை மேலாளர் (வணிகம்) சுப்பிரமணியன், அரசு விரைவு போக்குவரத்து கழக பிரிவு மேலாளர் அபிமன்யு, முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், இளைஞர் இளம்பெண் பாசறை துணை செயலாளர் சின்னத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்