அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 5 பவுன் நகை, பணம் திருட்டு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

மண்ணச்சநல்லூர் அருகே அரசு பஸ் கண்டக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-07-07 22:45 GMT
சமயபுரம்,

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் மாசி நகரை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 54). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா(52). இவர் திருவானைக்காவலில் உள்ள பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வீட்டை பூட்டி விட்டு செல்லமுத்து வங்கிக்கு சென்றிருந்தார். நிர்மலா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர்.

பின்னர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்கள், அங்கே ஒரு அறையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 சங்கிலிகள் மற்றும் தங்க காசுகள் உள்பட 5 பவுன் நகைகளையும், ரூ.15ஆயிரம் ரொக்கத்தையும் திருடிக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

வங்கிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய செல்லமுத்து வீட்டில் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்களும் வந்து மர்ம நபர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும், இது சம்மந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஆள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்