ஊரப்பாக்கத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை

கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்து ஓய்வுபெற்றவர், தீராத வயிற்று வலி காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-07-07 22:15 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் ஜெயராமன் தெரு, கோதண்டராமர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 62). இவர், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்து, கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவருக்கு கடந்த சில வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று காலையில் வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து பார்த்தபோது நாகராஜனை காணவில்லை. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர்.


இதனையடுத்து போலீசார், நாகராஜனின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தபோது, அவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இடத்தில் ஒரு கடிதம் மட்டும் சிக்கியது. அந்த கடிதத்தில் அவர், “எனக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணமில்லை” என்று எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், அவரது வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றுபார்த்த போது அங்கு நாகராஜன் பிணமாக மிதப்பது தெரிந்தது. பின்னர் அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்