அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: சத்துணவு அமைப்பாளர் பணியிடம் மாற்றம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அசூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் சத்துணவு சாப்பிட்டனர். இதில் 7 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

Update: 2018-07-07 22:15 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அசூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் சத்துணவு சாப்பிட்டனர். இதில் 7 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை மாணவ, மாணவிகள் சாப்பிட்டதாக தெரிகிறது. அதில் வழங்கப்பட்ட முட்டைகளில் கெட்டுப்போனதாகவும், அதனால் உணவு விஷமாகி வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதா என்று கண்டறிய பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி உத்தரவிட்டார். அதன்பேரில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு அவை தஞ்சையிலுள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே வேப்பூர் ஒன்றிய ஆணையர் செந்தில், அசூர் அரசு உயர்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பத்மாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்நிலையில் அசூர் அரசு உயர்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பத்மாவை பரவாய் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பணியிடம் மாற்றம் செய்து வேப்பூர் ஒன்றிய ஆணையர் செந்தில் உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்