குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு

மீமிசல் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-07-07 22:45 GMT
கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே அரசங்கரை மற்றும் துத்தனேந்தல் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாயத்து மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வண்டிகளில் ஒரு குடம் தண்ணீர் ரூ.20 கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று அரசங்கரையில் உள்ள கிழக்கு கடற்கரைசாலையில் கம்யூனிஸ்டு கட்சி மாநில மீனவர் அணி செயலாளர் ஷாஜகான் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அதிகாரி தமிழ்செல்வன், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், மீமிசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்