மலைகளில் உள்ள கனிம வளங்களை கொள்ளையடிக்கவே 8 வழிச்சாலை முத்தரசன் பேட்டி

மலைகளில் உள்ள கனிம வளங்களை கொள்ளையடிக்கவே 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2018-07-07 22:45 GMT
சிவகங்கை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் கண்ணகி கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்தார்.

தற்போது அவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் முத்தரசன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சேலம்-சென்னை இடையே அமைக்கப்பட உள்ள 8 வழிச்சாலை குறித்து பொதுக்கூட்டம் நடத்துவதற்கு கூட காவல்துறை மற்றும் நீதிமன்றம் அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.

சமூகத்தில் கருத்து சொல்லக்கூட அனுமதி மறுப்பது நல்லது கிடையாது. நீதிபதிகள் பாதிக்கப்பட்ட மாவட்டத்தை சேர்ந்த விவசாய நிலங்கள் மற்றும் அங்குள்ள மக்களை நேரடியாக சென்று பார்க்க வேண்டும். சேலத்திற்கும், சென்னைக்கும் சாலை வசதி இல்லாததை போன்ற கருத்தை திணிக்க முயற்சி செய்கின்றனர். ஏற்கனவே இங்கு இருக்கும் சாலைகளை அகலப்படுத்தினாலே போதும்.


அப்பகுதியில் உள்ள 8 மலைகளின் கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காகவே இந்த 8 வழிச்சாலை. தற்போது மேகமலை காடுகளை அழித்து சாலை போட போவதாக செய்தி வருகிறது. அப்படி செய்தால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு வைகையாற்றுக்கு தண்ணீர் வராத நிலை ஏற்படும். அவ்வாறு செய்தால் அதற்கு எதிராக மக்களை கொண்டு கடும் போராட்டம் நடத்தப்படும். கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய தண்ணீர் தர மறுப்பது அவர்களின் வழக்கம். காவிரி ஆணையம் மூலம் நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரியில் நீர் வழங்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்