ஓடும் ரெயிலில் ஏறியதொழிலாளி தவறிவிழுந்து பலி மானாமதுரை ரெயில் நிலையத்தில் பரிதாபம்

மானாமதுரை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏறியபோது டீ விற்கும் தொழிலாளி கால் இடறி தண்டவாளத்தில் தவறிவிழுந்து இறந்துபோனார்.

Update: 2018-07-07 22:45 GMT
மானாமதுரை,

மானாமதுரை பைபாஸ் ரோடு, நியூ வசந்த்நகரை சேர்ந்தவர் சசிகுமார். இவர் மானாமதுரை ரெயில் நிலையத்தில் டீ, வடை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் கண்ணன்(வயது 18). இவரும் அதே ரெயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் கண்ணன் ரெயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டிருந்தார். மதியம் மதுரையில் இருந்து ராமேசுவரம் சென்ற பாசஞ்சர் ரெயில் மானாமதுரைக்கு வந்தது.

அந்த பாசஞ்சர் ரெயில் நடைமேடையில் நிறுத்துவதற்காக மெதுவாக ஊர்ந்து வந்தது. அப்போது டீ விற்பனை செய்துகொண்டிருந்த கண்ணன் ஓடும் ரெயிலில் ஏறினார். ரெயில் படிக்கட்டில் ஏறிய அவர் கால் இடறி நடைமேடைக்கும், ரெயிலுக்கும் இடையே தண்டவாளத்தில் விழுந்தார். உடனே ரெயில் நின்றது.


தண்டவாளத்தில் விழுந்ததில் பலத்த காயமடைந்த கண்ணன் உயிருக்கு போரா டினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் இறந்துபோனார். இதுகுறித்து மானாமதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்