தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

Update: 2018-07-07 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்காக ரூ.282 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 2, 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் திட்டத்தில் ‘பம்ப்‘ செய்யும் இடத்தில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றி அமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்குள் புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டு சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தூய்மை பணி

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2011-ம் ஆண்டில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்து பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ரூ.95 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் கழிவுநீர் ‘பம்ப்’ செய்யும் பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.35 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்பட்டு முடிக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகளில் சிறந்து விளங்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்