கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை அலுவலர்கள் தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து அரசு அலுவலர்கள் முன் மாதிரியாக திகழ வேண்டும் என்று கலெக்டர் சிவஞானம் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2018-07-07 23:15 GMT
விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகத்தில் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர், தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் கீழ் தடை செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார்.

மக்களையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். விருதுநகர் மாவட்டத்தில், அதற்குரிய தொடக்கப் பணியாக, மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாளை முதல் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொருட்களை எடுத்துச்செல்வதற்கும், உணவுப்பொருட்களை பார்சல் செய்து எடுத்து செல்வதற்கும் தான் அதிக அளவில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக இருக்கும் துணிப்பை, சில்வர் டம்ளர், சில்வர் கரண்டி, பேப்பர் உறிஞ்சி, இலை உள்ளிட்டவைகளை அரசு அலுவலர்கள் அரசு அலுவலகம் மற்றும் வீடுகளிலும் பயன்படுத்தி இதன் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிப்பதில் நமது மாவட்டம் முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்