தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 267 பேருக்கு பணி நியமன ஆணை கலெக்டர் ஷில்பா வழங்கினார்

பாளையங்கோட்டையில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 267 பேருக்கு பணி நியமன ஆணையை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

Update: 2018-07-07 22:00 GMT

நெல்லை,

பாளையங்கோட்டையில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 267 பேருக்கு பணி நியமன ஆணையை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. பல்வேறு நிறுவனங்கள் தனித்தனியாக அரங்குகள் அமைத்து இருந்தன. அவர்கள் தங்களுக்கு தேவையான இளைஞர்களை தேர்வு செய்தனர்.

தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்ட 267 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி பெற்ற 50 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. ஒருவருக்கு தாட்கோ மூலம் ஒரு கார் வழங்கப்பட்டது. பணி ஆணைகளை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

வேலை வாய்ப்பு அதிகம்

தென்னக ஆக்ஸ்பேர்டு என அழைக்கும் வகையில் இங்கு அதிகமான பள்ளி, கல்லூரிகள் உள்ளன. படித்த அனைவருக்கும் அரசு பணிகள் கிடைப்பதில் இயலாத நிலை உள்ளது. அதிகமான தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது.

வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்பை பெற்று தரும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவில் பாளையங்கோட்டையில் நடத்தப்பட்டு உள்ளது.

இந்த முகாமில் 68 தனியார் துறை முன்னணி நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். மொத்தம் 267 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வேலையில் சேருவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி கொண்டு பெரிய பதவிக்கு வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அந்தோணி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி, சாராள் தக்கர் மகளிர் கல்லூரி முதல்வர் உஷா காட்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து செய்து இருந்தன.

மேலும் செய்திகள்