தீபாவளி பயண முன்பதிவு வெறிச்சோடிய மதுரை ரெயில்வே முன்பதிவு மையம்

ஆன்லைன் முன்பதிவு காரணமாக தீபாவளி பயண முன்பதிவுக்கு சில பயணிகள் மட்டும் வந்ததால், மதுரை ரெயில்வே முன்பதிவு மையம் வெறிச்சோடி கிடந்தது.

Update: 2018-07-07 21:23 GMT

மதுரை,

தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான ரெயில்வே டிக்கெட் முன்பதிவு(120 நாட்கள் முன்னதாக) தொடங்கியது. வழக்கமாக, விடுமுறை கால முதல் நாள் முன்பதிவின் போது, ரெயில்வே முன்பதிவு மையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில முன்பதிவு மையங்களில் தள்ளுமுள்ளு நடந்த சம்பவங்களும் உண்டு. தற்போது, தொழில்நுட்ப வளர்ச்சியால், ஆன்லைன் மூலமாக இ.டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் கடந்த சில வருடங்களாக ஆன்லைனில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை 75 சதவீதமாக அதிகரித்துள்ளது.


அதனை தொடர்ந்து தீபாவளி பயண டிக்கெட்டுக்கான முன்பதிவுக்கு ரெயில்நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களுக்கு வெகு சில பயணிகளே வந்திருந்தனர். இதனால், மதுரை ரெயில் நிலையத்தின் கிழக்கு நுழைவுவாயில் முன்பதிவு மையம், மேற்கு நுழைவுவாயில் முன்பதிவு மையம் ஆகியவற்றில் பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இதற்கிடையே, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்வதற்கான ரெயில்களில் வருகிற 3 நாட்களுக்கு முன்பதிவு செய்ய பயணிகள் முன்பதிவு மையங்களுக்கு வருகை தர வாய்ப்புள்ளதாக மதுரை முன்பதிவு மைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்