பெங்களூருவில் குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண பாலிதீன் பைகள் பயன்படுத்தும் கடைகளின் உரிமம் ரத்து

பெங்களூருவில் குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண பாலிதீன் பைகள் பயன்படுத்தும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2018-07-07 22:00 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண பாலிதீன் பைகள் பயன்படுத்தும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண...

பெங்களூரு நகரில் குப்பை பிரச்சினை அரசுக்கும், மாநகராட்சிக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண அரசும், மாநகராட்சியும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அதனை தீர்க்க முடியவில்லை. இந்த நிலையில், பெங்களூருவில் நிலவும் குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக மாநகராட்சியின் மன்ற சிறப்பு கூட்டம் நேற்று மேயர் சம்பத்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியதும் ஆளுங்கட்சி தலைவர் சிவராஜ் எழுந்து பேசும் போது, “தூய்மை நகரங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது. இதற்கு முன்பு பா.ஜனதா வசம் மாநகராட்சி இருந்தபோது மண்டூரில் உள்ள குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிந்தது. இது பெரிய அளவில் பேசப்பட்டாலும், தூய்மை நகரங்களில் பெங்களூருவுக்கு சிறந்த தரவரிசை வழங்கப்பட்டது. தற்போது தூய்மை நகரங்களின் பட்டியலில் பெங்களூருவுக்கு சரியான தரவரிசை வழங்கவில்லை,“ என்றார்.

கடைகளின் உரிமம் ரத்து

இதற்கு பா.ஜனதாவை சேர்ந்த கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் காங்கிரஸ், பா.ஜனதா கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் உண்டானது. உடனே எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி எழுந்து, பெங்களூரு நகரில் குவியும் குப்பை மூலமாக மாநகராட்சியில் பல கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது. இதுதான் காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கூட்டணியின் சாதனை என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். பின்னர் மேயர் சம்பத்ராஜ் பேசியதாவது:–

குப்பை பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண பாலிதீன் பைகள் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. அதனால் பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை அனைத்து கடைகளிலும் நிறுத்த வேண்டும். இதற்காக ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகும், பாலிதீன் பைகள் பயன்படுத்தினால், அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். பாலிதீன் பைகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்