தனியார் நிறுவன அதிகாரியின் கார் கண்ணாடியை உடைத்து மடிக்கணினி, பணம் திருட்டு

விருகம்பாக்கத்தில் தனியார் நிறுவன அதிகாரியின் கார் கண்ணாடியை உடைத்து மடிக்கணினி மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-07-07 23:10 GMT
பூந்தமல்லி, 

சென்னை விருகம்பாக்கம் சாலிகிராமம், ராமர் தெருவை சேர்ந்தவர் கமல்ராஜ் (வயது 29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரில் விருகம்பாக்கம், அருணாச்சலம் சாலையில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு சென்றார். அங்கு சாலையோரம் காரை நிறுத்தி விட்டு சூப்பர் மார்கெட்டிற்குள் சென்று பொருட்கள் வாங்கினார். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக காரின் அருகே வந்தபோது அதன் பின்பக்க கதவில் உள்ள கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.

ரூ.40 ஆயிரம் பணம்

இதனால் அதிர்ச்சி அடைந்த கமல்ராஜ், உடனே காரின் கதவை திறந்து பார்த்தார். அப்போது காரின் இருக்கையில் ஒரு பையில் வைத்திருந்த விலை உயர்ந்த மடிக்கணினியை காணவில்லை. மேலும் அதில் இருந்த ரூ.40 ஆயிரம் பணமும் திருடப்பட்டு இருந்தது.

கமல்ராஜ் காரை நிறுத்துவதை கண்காணித்த யாரோ மர்ம ஆசாமிகள், அவர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் சென்றதும் காரின் கண்ணாடியை உடைத்து மடிக்கணினி மற்றும் பணத்தை திருடிச்சென்று உள்ளனர். திருடப்பட்ட மடிக்கணினியின் விலை ரூ.1 லட்சம் என கூறப்படு கிறது.

போலீசாருக்கு தகவல்

இந்த திருட்டு குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அவர்கள் கார் கண்ணாடியை உடைத்து திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்