டிரைவர் மீது தாக்குதல்: அரசு பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி போராட்டம்

திண்டுக்கல்லில் டிரைவரை தாக்கியதால் அரசு பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2018-07-07 23:30 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல்லில் இருந்து நேற்று ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள கோபிநாதசுவாமி கோவிலுக்கு ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. திண்டுக்கல் ஏ.எம்.சி. சாலையில் அந்த பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது சிலர் பஸ்சை வழிமறித்து தகராறு செய்தனர். மேலும் அதை தட்டிக்கேட்ட டிரைவரையும் தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதையடுத்து அரசு பஸ் நடுரோட்டில் நிறுத்தப்பட்டது. மேலும் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். அதன்பேரில் டிரைவரை தாக்கியவர்களை தேடி போலீசார் சென்றனர். இதற்கிடையே டிரைவர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பற்றி தகவல் பரவியது.

இந்த சம்பவத்தை கண்டித்து மேலும் 2 அரசு பஸ்கள் அடுத்தடுத்து சாலையில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக மற்ற பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏராளமான வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனால் திண்டுக்கல் ஏ.எம்.சி. சாலையில் சுமார் 30 நிமிடங் கள் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் நடுரோட்டில் நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக் கப்பட்டன. அதேநேரம் டிரைவரை தாக்கியவர்களில் 3 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதுபற்றி அறிந்ததும் டிரைவர்கள், கண்டக்டர்கள் பலர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். இறுதியில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து கொண்டனர். இதனால் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்