பெரும்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு: தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்

பெரும்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு போனது. மேலும் அந்த பகுதிகளில் தொடர்ந்து திருட்டுகள் நடப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2018-07-07 23:45 GMT
பெரும்பாறை,

பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு, கட்டக்காடு, வெள்ளரிக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் ஆள்இல்லாத வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து திருடி செல்கின்றனர். பெரும்பாறை அருகே உள்ள கட்டக் காடு கிராமத்தை சேர்ந்தவர் சித்திரைவேல்(வயது53). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார். பின்னர் மதியம் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள 2 பீரோக்களையும் மர்மநபர்கள் திறந்து உள்ளே இருந்த ¾ பவுன் நகை, ரூ.11 ஆயிரம், ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள 2 பட்டுசேலைகள் ஆகியவற்றை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சித்திரைவேல் தாண்டிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இது போல கடந்த 3-ந் தேதி கட்டக்காடு கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் (32) என்பவரின் வீட்டில் 5 பவுன் நகையையும், வெள்ளரிக்கரை கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து (65) என்பவரின் வீட்டில் அரை பவுன் நகை, ரூ. 15 ஆயிரத்தையும் மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். கடந்த 5-ந் தேதி மஞ்சள்பரப்பு கிராமத்தில் கண்ணன் (38) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு பீரோவை திறந்த அரை பவுன் நகை, 2 வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். 6-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி (35) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவில் இருந்த 5 ஆயிரத்து 500 ரூபாயை திருடி சென்று உள்ளனர். அதே போல் சில வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் அந்த வீடுகளில் எதுவும் இல்லாததால் திரும்பி சென்று உள்ளனர்.

இந்த தொடர் திருட்டுகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். திருட்டு குறித்து தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் சிலர் புகார் கொடுக்காமலேயே உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வீடு புகுந்து நகை, பணம் திருடும் மர்மநபர்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்