வங்கி அதிகாரி போல பேசி முன்னாள் எம்.எல்.ஏ.வின் வங்கி கணக்கில் ரூ.49 ஆயிரம் ‘அபேஸ்’

வங்கி அதிகாரி போல பேசி முன்னாள் எம்.எம்.ஏ.வின் வங்கி கணக்கில் இருந்து ரூ.49 ஆயிரத்தை மர்மநபர் ‘அபேஸ்‘ செய்துள்ளார்.

Update: 2018-07-07 22:30 GMT

மங்களூரு,

வங்கி அதிகாரி போல பேசி முன்னாள் எம்.எம்.ஏ.வின் வங்கி கணக்கில் இருந்து ரூ.49 ஆயிரத்தை மர்மநபர் ‘அபேஸ்‘ செய்துள்ளார்.

வங்கி மோசடி

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி, அவர்களின் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய எண் ஆகியவற்றை வாங்கி வங்கி கணக்கில் இருந்து பணத்தை மர்மநபர்கள் ‘அபேஸ்‘ செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் இதுபோன்ற போன் வந்தால், வங்கி கணக்கு விவரங்களை யாரும் தெரிவிக்க வேண்டாம் என்று வங்கி சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் தான் உள்ளது.

தற்போது அந்த மோசடி கும்பலிடம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் வங்கி விவரங்களை கொடுத்து பணத்தை பறிகொடுத்த சம்பவம் மங்களூருவில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:–

முன்னாள் எம்.எல்.ஏ.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர் ஜே.ஆர்.லோபோ. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், மங்களூரு தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவருடைய செல்போனுக்கு கடந்த 5–ந்தேதி ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் பேசிய நபர், ‘நான் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து அதிகாரி பேசுகிறேன். உங்களுடைய ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது. இதனால் உங்கள் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய எண் ஆகியவற்றை கொடுத்தால், உடனடியாக புதுப்பித்து தருகிறேன்‘ என்று கூறியுள்ளார்.

அவர் கூறியதை உண்மை என நம்பிய ஜே.ஆர்.லோபோ, தன்னுடைய வங்கி கணக்கு விவரங்களையும், ஏ.டி.எம். கார்டு விவரங்களையும் தெரிவித்துள்ளார்.

ரூ.49 ஆயிரம் ‘அபேஸ்‘

இந்த நிலையில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து 3 தவணைகளில் ரூ.49 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜே.ஆர்.லோபோ, இதுகுறித்து வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது வங்கியில் இருந்து யாரும் அவ்வாறு போன் செய்யவில்லை என்றும், இதுபோன்ற போன் வந்தால் வங்கி கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தோம் என்றனர். இதனை கேட்டு அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான், யாரோ மர்மநபர் வங்கி அதிகாரி போல பேசி ரூ.49 ஆயிரத்தை ‘அபேஸ்‘ செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.ஆர்.லோபோ, கத்ரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்