நவிமும்பையில் வியாபாரி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது

நவிமும்பையில் வியாபாரி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-07 23:30 GMT
மும்பை, 

நவிமும்பையில் வியாபாரி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சுட்டுக்கொலை

நவிமும்பை காமோட்டே பகுதியை சேர்ந்தவர் சாந்தாராம்(வயது35). பேட்டரி வியாபாரி. இவரது மனைவி விருசாலி(25). கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாந்தாராம் மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

சாந்தாராமின் மனைவி விருசாலிக்கு திருமணத்திற்கு முன்பு நில்ஜே பகுதியை சேர்ந்த அனில் தேரே(42) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

3 பேர் கைது

அப்போது விருசாலி தன்னை திருமணம் செய்யுமாறு அனில் தேரேவிடம் வற்புறுத்தினார். இதற்கு அவர் மறுத்ததால் விருசாலி, சாந்தாராமை திருமணம் செய்துகொண்டு காமோட்டேவில் வசித்து வந்தார். இதன்பின்னர் அனில் தேரே மீண்டும் விருசாலியை சந்தித்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார். மேலும் அவரை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்தார். இதற்கு விருசாலி மறுத்ததால் அவரது கணவரை கொலைசெய்ய அனில் தேரே திட்டமிட்டார்.

இதனைத்தொடர்ந்து அனில் தேரே, தனது கூட்டாளிகளான வசந்த் (41), சித்தார்த்(30) ஆகியோருடன் சேர்ந்து சாந்தாராமை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அனில் தேரே உள்பட 3 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை வருகிற 13-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்