நெல்லையில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் கடத்தி வரப்பட்ட 1,440 போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல்: 4 பேர் கைது

நெல்லையில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் கடத்தி வரப்பட்ட 1,440 போலி மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-07-08 00:15 GMT
திண்டுக்கல்,

நெல்லையில் இருந்து திண்டுக்கல்லுக்கு மதுபானம் கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் மதுவிலக்கு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகுராஜ், பழனிசாமி உள்ளிட்ட போலீசார் திண்டுக்கல் பழனி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பழனி சாலையில் உள்ள மேம்பாலம் அருகே சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 30 பெட்டிகளில் மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே காரில் இருந்த திண்டுக்கல் அணைப்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி மகன் ரமேஷ்குமார் (வயது 27), முத்துக்குமார் (52), தூத்துக்குடியை சேர்ந்த ராஜன் மகன் கார்த்தி (31), கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த ராஜாமணி மகன் துளசி (37) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, கார் மற்றும் மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்து திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் பாட்டில்களை போலீசார் ஆய்வு செய்ததில் அனைத்தும் போலி மதுபானங்கள் என்பதும், நெல்லையில் இருந்து கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 30 பெட்டிகளிலும் மொத்தம் 1,440 பாட்டில்கள் இருந்தன.

இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்