தேனியில் பள்ளிக்கூடம் அருகில் விற்பனை: 216 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், 3 பேர் கைது

தேனியில் 216 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-08 00:15 GMT
தேனி,

இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையில் போலீசார் தேனி நேதாஜி ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பள்ளிக்கூடம் முன்பு சந்தேகப்படும் படியாக 2 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. விசாரணையில் அவர்கள் போடி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ராஜா (வயது 44), தேனி அல்லிநகரம் பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருவேங்கடம் மகன் ரெங்கராஜ் (35) ஆகியோர் என தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தாங்களும், தேனியை சேர்ந்த ராமர் என்பவரும் சேர்ந்து, தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனர். அதன்பேரில், நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள குடோனில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து மொத்தம் 216 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.86 ஆயிரத்து 400 ஆகும்.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜா, ரெங்கராஜ் மற்றும் குடோன் உரிமையாளரான அல்லிநகரம் கிணத்துத் தெருவை சேர்ந்த சுகுமார் (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தேனியை சேர்ந்த ராமர் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்