யோகாசன நடனம்

அபூர்வா ஜெயராஜன், பேஷன் டிசைனிங் படித்தவர். நடனக்கலைஞர் மற்றும் யோகா பயிற்சியாளராகவும் விளங்குகிறார்.

Update: 2018-07-08 09:48 GMT
யோகாசனத்துடன் தான் கற்ற நடன கலையையும் இணைத்து விதவிதமான ‘போஸ்’களில் புதிய யோகாசனங்களை செய்து அசத்துகிறார் அபூர்வா ஜெயராஜன். அக்ரோ யோகா என்ற பெயரில் இவர் செய்யும் யோகாசனங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. நடனத்தின் சாயலில் யோகாசனங்களை விதவிதமாக செய்து இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்து வருகிறார்.

‘‘உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்வதற்காக யோகாவை தேர்ந்தெடுத்தேன். நான் நடனக்கலைஞர் என்பதால் யோகாசனம் செய்வது எளிமையாக இருந்தது. வெறுமனே யோகாவை செய்யாமல் அதனுடன் நடனம், ஜிம்னாஸ்டிக், ஏரோபிக்ஸ் போன்றவற்றையும் கலந்து அக்ரோ யோகா என்பதனை உருவாக்கினேன். அது என் உடல் அமைப்புக்கு சவுகரியமாக இருந்தது. இயற்கையை நேசிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். இயற்கையின் சுவாசத்தை நுகர்ந்து யோகாசனம் செய்வது மன மகிழ்ச்சியை தருகிறது. எனது தாயார் பால்கனியில் ஏராளமான செடிகளை வளர்க்கிறார். அவற்றுக்கு மத்தியில் யோகாசன பயிற்சி செய்கிறேன்’’ என்கிறார்.

அபூர்வா மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர். பெண்கள் கண்டிப்பாக தினமும் ஏதாவதொரு யோகாசனம் செய்ய வேண்டும் என்கிறார். அது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகைகளில் பலன் தரும் என்கிறார்.

‘‘யோகா என்பது உடற்பயிற்சியோடு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. ரத்த ஓட்டம் சீராக இருக்கவும், மன அழுத்தம் இன்றி இயல்பாக இருக்கவும், உடல் ஆரோக்கியத்தை பேணவும் உதவுகிறது. நான் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் மூன்று, நான்கு மாதங்கள் கடும் அவதிப்பட்டேன். யோகாதான் அந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேடி தந்தது. 20 நிமிடங்கள் முறைப்படி யோகா செய்தால் போதும். தியானம் செய்த மன நிறைவும் கிடைக்கும்’’ என்கிறார். 

மேலும் செய்திகள்