வயதான மாணவி தெளிவான வாழ்க்கை

படிப்புக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார், கார்த்தியாயினி.

Update: 2018-07-08 09:58 GMT
96 வயதாகும் கார்த்தியாயினி  4-ம் வகுப்பு படிக்கிறார். அது எப்படி என்கிறீர்களா? 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமான கேரளாவில் சிறப்பு கல்வியறிவு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அந்த திட்டத்தில் இணைந்து கார்த்தியாயினி படிக்கிறார். 10-ம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருக்கிறது.

தற்போது கணக்கு பாடம் மற்றும் மலையாள எழுத்துக்களை வரிசை கிரகமாக படிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆங்கில வழி கல்வி பயிற்சியும் பெற்றுக் கொண்டிருக்கிறார். இவர் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள சேப்பாடு கிராமத்தை சேர்ந்தவர். அங்குள்ள கிராம பஞ்சாயத்து மூலம் அனைவரும் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போது அவரது கிராமத்தில் உள்ளவர்கள் யாரும் கல்வியில் ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கிறார்கள். கார்த்தியாயினி தனி ஆளாக படிக்கப் போயிருக்கிறார். இதன் மூலம் கேரள மாநிலத்தின் வயதான மாணவி என்ற சிறப்பை பெற்றிருக்கிறார்.

இந்த வயதிலும் படிப்பு மீது கார்த்தியாயினி காட்டும் அக்கறையை பார்த்து இப்போது அக்கம்பக்கத்து முதியவர்களும் அவருடன் சேர்ந்து படிக்க தொடங்கி இருக்கிறார்கள். வழக்கமாக 50 முதல் 70 வயதை கடந்தவர்களுக்கு வாரத்தின் இறுதி நாட்களில் அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பாடம் நடத்தப்படுகிறது. எனினும் கார்த்தியாயினியின் வயதை கருத்தில் கொண்டு அவருடைய வீட்டிற்கே வந்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். கார்த்தியாயினியின் தந்தை ஆசிரியராக பணி புரிந்தவர். குடும்ப சூழ் நிலையால் 4-ம் வகுப்புடன் கார்த்தியாயினி படிப்பை நிறுத்திவிட்டார். எனினும் வீட்டில் மாணவர்களுக்கு தந்தை டியூசன் எடுப்பதை கூர்ந்து கவனித்து வந்திருக்கிறார்.

‘‘எனக்கு இரண்டு சகோதரிகள். அவர்களை பாரமரிப்பதற்காகவும், பள்ளிக்கு அனுப்புவதற்காகவும் நான் 4-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டேன். 12 வயதில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வேலை பார்க்க தொடங்கினேன். எனது தந்தை 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வீட்டில் பாடம் எடுப்பார். அவர் கற்றுக்கொடுப்பதை கூர்ந்து கவனித்து நானும் மனப்பாடம் செய்வேன்’’ என்கிறார்.

கார்த்தியாயினிக்கு 18 வயதில் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். 6 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். கடைசி குழந்தை பிறந்த சில நாட்களில் கணவர் இறந்துபோய்விட்டார். அதன்பிறகு கோவில் ஊழியராக பணியை தொடர்ந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி இருக்கிறார். எனினும் அவரால் பிள்ளைகளை சரியாக படிக்கவைக்க முடியவில்லை. தாயாரை போலவே அவருடைய 60 வயது மகளும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். எனினும் திருமணத்திற்கு பிறகு இந்த கல்வி திட்டத்தில் சேர்ந்து 10-ம் வகுப்பு முடித்து விட்டார். மகளை பின்பற்றி கார்த்தியாயினி பல ஆண்டுகளுக்கு பிறகு தடைபட்ட படிப்பை இப்போது உற்சாகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.    

மேலும் செய்திகள்