ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதல்: மளிகை கடைக்காரர் தலை நசுங்கி சாவு

சுசீந்திரம் அருகே ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதியதில் மளிகை கடைக்காரர் தலை நசுங்கி இறந்தார்.

Update: 2018-07-08 22:45 GMT
தென்தாமரைகுளம்,

கொட்டாரம் அருகே உள்ள மந்தாரம்புதூர்  பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி என்கிற ராஜா (வயது 55), வியாபாரி. இவர் கொட்டாரம் சந்திப்பில் மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். லதா, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

பெரியசாமி தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நாகர்கோவில், கோட்டார் மார்க்கெட்டுக்கு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று காலை தனது ஸ்கூட்டரில் கோட்டாருக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு, கொட்டாரத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

சுசீந்திரம் அருகே ஈத்தங்காடு சந்திப்பில் வந்த போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழி விடுவதற்காக ஸ்கூட்டரை திருப்பினார். அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி பெரியசாமி சாலையில் விழுந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ஸ்கூட்டரில் இருந்த பொருட்களும் சாலையில் சிதறி விழுந்தன. இதையடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

இந்த விபத்து குறித்து தென்தாமரைகுளம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பெரியசாமி பலியானது குறித்து அவரது மனைவிக்கும், மகனுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து இறந்தவரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பெரியசாமியின் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்