காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்

Update: 2018-07-08 22:45 GMT
பென்னாகரம்,

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனிடையே கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,600 கனஅடி வந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததாலும், வார விடுமுறை என்பதாலும் நேற்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் தொங்கு பாலம், பார்வை கோபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று காவிரியின் அழகை கண்டு ரசித்தனர்.

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒகேனக்கல்லை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்