‘முயற்சி என்பது இருந்தாலே வெற்றி பெறலாம்’ அமைச்சர் பாஸ்கரன் பேச்சு

முயற்சி என்பது இருந்தாலே முழுமையாக வெற்றி பெறலாம் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.

Update: 2018-07-08 22:30 GMT

தேவகோட்டை,


தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வருவாய் அலுவலர் இளங்கோ, செந்தில்நாதன் எம்.பி., தேவகோட்டை சப்-கலெக்டர் ஆஷா அஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கிவைத்தார். பின்னர் முகாமில் தேர்வு செய்யப்பட்ட 386 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கி பேசியதாவது:-

மாவட்ட அளவில் அந்தந்த பகுதிகளில் படித்த இளைஞர்கள் பயன்பெறும் விதமாக வேலைவாய்ப்பு வழங்கிட ஏதுவாக புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, தொழில் மையங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன. அதன்மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள கல்வித்திறனுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறும் விதமாக தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நடைபெற்ற இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 208 ஆண்கள், 178 பெண்கள் என 386 பேரை தேர்வுசெய்தன. தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு முகாமின் நோக்கம் படித்தவர்களுக்கு தகுதியான பணி தங்கள் பகுதிகளிலே வழங்க வேண்டும் என்பதே. ஒவ்வொருவருக்கும் பணி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முயற்சி என்பது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். முயற்சி என்பது இருந்தாலே முழுமையாக வெற்றி பெறலாம். எனவே மனதளவில் தைரியத்தை வைத்து ஒரு திட்டத்தை செயல்படுத்த தொடங்கினால் அதில் வெற்றி உறுதியாக கிடைக்கும். எனவே படித்த ஒவ்வொருவரும் அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குனர் கருணாகரன், சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சேவியர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்