சிறுமி கற்பழிப்பு வழக்கு வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை கோலார் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கற்பழித்த வழக்கில், வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-07-08 22:00 GMT
கோலார் தங்கவயல்,

சிறுமியை கற்பழித்த வழக்கில், வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

7 ஆண்டுகள் சிறை

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா ஏட்டகோடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 25). இவருக்கும் சிக்கதிருப்பதி பகுதியை சேர்ந்த மைனர் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கார்த்திக், மைனர் பெண்ணை மோட்டார் சைக்கிளில் கோலார் தங்கவயலுக்கு கடத்தி வந்து உள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து மைனர் பெண்ணை, கார்த்திக் கற்பழித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். அவர் மீது கோலார் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி நடந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் நீதிபதி பி.எஸ்.ரேகா தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக்குக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கு

இதேப்போல கோலார் தாலுகா மார்கேனஹள்ளி பகுதியை சேர்ந்த மனோகர்(22) என்பவர், கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி அதேப்பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கோலார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கோலார் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி பி.எஸ்.ரேகா தீர்ப்பு வழங்கினார். அதில் மனோகருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த 2 வழக்கிலும் அரசு சார்பில் வக்கீல் முனிசாமி கவுடா ஆஜரானார்.

மேலும் செய்திகள்