பெரியாறு பாசன கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

பெரியாறு பாசன கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி இறந்தார். அவரது உடலை மீட்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-07-08 22:00 GMT
வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பேட்டை புதூரை சேர்ந்தவர் சென்ராயன் மகன் திருப்பதி (வயது 37). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் திருப்பதி பெரியாறு பாசன கால்வாயில் குளிக்க சென்றார்.

அப்போது அவர் தவறி தண்ணீரில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் திருப்பதி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவர் என்ன ஆனார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் மற்றும் சோழவந்தான் தீயணைப்பு வீரர்கள் ஆண்டிபட்டி, கொண்டயம்பட்டி, கேட்டுக்கடை, அலங்காநல்லூர், மாலைப்பட்டி பகுதிகளில் உள்ள அமுக்கு பாலங்களில் தேடி பார்த்தும், திருப்பதியை கண்டுபிடிக்க முடியவில்லை.


இந்தநிலையில் தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தகோரி திருப்பதியின் உறவினர்கள் வாடிப்பட்டி சந்தை கேட் அருகில் சாலை மறியல் போராட்டம் செய்தனர். தகவலறிந்து வந்த சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமார், இன்ஸ்பெக்டர் ரெஜினா உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தேடுதல் வேட்டைக்கு கூடுதல் ஆட்களை அனுப்புவாக கூறியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று மாலை அலங்காநல்லூர் அருகே செம்புக்குடிப்பட்டி என்ற இடத்தில் உள்ள பாசன கால்வாய் இடிபாடுகளில் சிக்கியிருந்த திருப்பதியின் உடல் மீட்கப்பட்டு, வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்