சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக பெண் போலீஸ் அதிகாரி புகார்: விவசாய சங்க பொறுப்பாளர் கைது

சமூக ஊடகங்களில் தன்னையும், தனது குடும்பத்தையும் அவதூறு பரப்பியதாக பெண் போலீஸ் அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் விவசாய சங்க பொறுப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-08 22:15 GMT
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் திருவெண்காடு வடக்குதோப்பு தெருவை சேர்ந்தவர் துரைராஜ். விவசாய சங்க பொறுப்பாளர். இவருடைய மகன் கோபி. இவர், கடந்த 13-ந் தேதி வேலை தொடர்பாக வெளிநாடு சென்று விட்டார். ஆனால் கடந்த 16-ந் தேதி திருவெண்காடு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி, ரமேஷ் என்பவரை கோபி தாக்கியதாக வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக கோபி, வெளிநாடு சென்றுள்ளதற்கான ஆவணங்களுடன் கோபியின் தந்தை துரைராஜ், மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழியிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மீது புகார் கொடுத்தார். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக், சென்னை உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்ட்டி ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்்பட்டுள்ளது.

இந்தநிலையில் விவசாய சங்க பொறுப்பாளர் துரைராஜும், அவருடைய மகனும் நாம் தமிழர் கட்சி நாகை வடக்கு மாவட்ட துணை செயலாளருமான கோபி என்பவரும் தன்னையும், தனது குடும்பத்தினரையும் பற்றி சமூக ஊடகங்களில் தொடர்ந்து அவதூறாக பரப்பி வந்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி திருவெண்காடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துரைராஜை கைது செய்தனர். பின்னர் அவர் சீர்காழி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, பொறையாறு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் துரைராஜ் உறவினர்கள், வக்கீல் சங்கமித்திரன் ஆகியோர் மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழியிடம், இன்ஸ்பெக்டர் வேலுதேவி மீது ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்