சாலவாக்கம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சாலவாக்கம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-08 22:00 GMT

செங்கல்பட்டு

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கத்தை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் என்று பலமுறை புகார் கொடுக்கப்பட்டது. இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

குடிநீர் வழங்கக்கோரி நேற்று காலை காலி குடங்களுடன் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன், படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் சாலவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் சாலவாக்கம் -செங்கல்பட்டு சாலையில் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆலப்பாக்கம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் பொறுப்பாளர் கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் பணியாற்றி வருகிறார்.

இதனால் குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. விரைவில் குடிநீர் வழங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்