கூண்டை உடைத்து தப்பிய சிறுத்தைப்புலி சிக்காததால் பொதுமக்கள் அச்சம்

காரமடை அருகே கூண்டை உடைத்து தப்பிய சிறுத்தைப்புலி சிக்காததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-07-08 22:15 GMT
காரமடை, 

கோவை மாவட்டம் காரமடை அருகே சீரியூர், பனப்பாளையம், மேடூர் தோகமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைப்புலி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஆடு, நாய் போன்ற கால்நடைகளை அடித்துக்கொன்றது. இதன் தொடர்ச்சியாக பகல் நேரத்திலும் சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ய தொடங்கியது. இதையடுத்து வனத்துறையினர் மேடூர், பனப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தினர். அப்போது பொம்மநாயக்கர் தோட்ட பகுதியில் விஜயக்குமார் என்பவரின் ஆட்டை சிறுத்தைப்புலி அடித்துக்கொன்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதை அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் கூடுதலாக 2 கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். அந்த பகுதியில் வைத்து இருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தைப்புலியின் நடமாட்டம் பதிவாகி இருந்தது.

சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்த அவற்றை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி சிறுத்தைப்புலியை பிடிக்க பொம்மநாயக்கர் தோட்ட பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. அதனுள் உயிருடன் ஒரு ஆட்டை கட்டி வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உணவு தேடி வந்த சிறுத்தைப்புலி கூண்டுக்குள் புகுந்து ஆட்டை அடித்து கொன்றது. பின்னர் கூண்டின் அடியில் இருந்த மரபலகையை உடைத்து கொண்டு தப்பியது. சிறுத்தைப்புலி கூண்டை உடைத்து தப்பிய சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் கோவையில் இருந்து மேலும் ஒரு கூண்டையும், சிறுத்தைப்புலி உடைத்த கூண்டையும் சரி செய்து ஒரு கூண்டில் ஆட்டையும், மற்றொரு கூண்டில் நாயையும் கட்டி வைத்தனர். கூண்டை சுற்றியும் மரக்கிளைகளை போட்டு வைக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து அப்பகுதியில் 24 மணி நேரமும் வனச்சரகர் சரவணன் தலைமையில் வனவர் சுரேஷ், வனக்காப்பாளர்கள் முனுசாமி, சகாதேவன், வனக்காவலர்கள், மற்றும் வேட்டை தடுப்பு காவலர் என 8 பேர் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

8 நாட்கள் ஆகியும் சிறுத்தைப்புலி கூண்டில் சிக்காததால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதுகுறித்து காரமடை வனச்சரகர் சரவணன் கூறியதாவது:-

10 நாட்களுக்கு முன்பு காரமடை வனசரகத்துக்கு உட்பட்ட பொம்மநாயக்கர் தோட்ட பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலி தப்பியது. இதனால் மேலும் ஒரு கூண்டும், பழுதடைந்த கூண்டையும் சரிசெய்து மொத்தம் 2 கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளது.

அதன் பிறகு இதுவரை சிறுத்தைப்புலி இப்பகுதிக்கும் மற்ற எந்த பகுதிக்கும் வரவில்லை. பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தொடர்ந்து 8 பேர் கொண்ட குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்