மாதம் தோறும் பணம் தருவதாக கூறி காரை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்டவர் கைது

மாதம் தோறும் பணம் தருவதாக கூறி காரை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-08 22:15 GMT
தாம்பரம்,

சென்னை பெரம்பூர் அன்பழகன் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர்பாஷா(வயது 29). இவர், தனக்கு சொந்தமான காரை விற்பனை செய்வதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இணைய தளத்தில் விளம்பரம் செய்து இருந்தார்.

அதை பார்த்த குரோம்பேட்டை நேரு நகர், அஸ்தினாபுரம் பிரதானசாலை பகுதியை சேர்ந்த சிவகுமார்(36) என்பவர், ஜாகிர்பாஷாவை தொடர்பு கொண்டு, “நான் சொந்தமாக கார்களை வாடகைக்கு விடும் நிறுவனம் நடத்தி வருகிறேன். உங்கள் காரை விற்பனை செய்யாமல் என்னிடம் வாடகைக்கு கொடுத்தால், தனியார் மென்பொருள் நிறுவனங்களுக்கு அந்த காரை வாடகைக்கு விட்டு மாதம்தோறும் உங்களுக்கு ரூ.22 ஆயிரம் தந்து விடுகிறேன். என்னிடம் இதுபோல் 20-க்கும் மேற்பட்ட கார்கள் இருகின்றது. அவை அனைத்தும் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது” என்றார்.


இதை நம்பிய ஜாகிர்பாஷா, தனது காரை விற்பனை செய்யாமல் சிவகுமாரிடம் வாடகைக்கு ஒப்படைத்தார். காரை வாங்கிக் கொண்ட சிவகுமார், தான் சொன்னபடி முதல் மாதம் மட்டும் ரூ.22 ஆயிரம் வாடகையை ஜாகிர் பாஷாவிடம் கொடுத்தார்.

அதன்பிறகு 5 மாதங்களுக்கு மேல் காருக்கான வாடகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். ஜாகிர் பாஷா வாடகை பணத்தை கேட்டும் அதை கொடுக்காமல் சிவகுமார் தொடர்ந்து அவரை அலைக்கழித்து வந்தார்.


இதனால் ஜாகிர் பாஷா, வாடகை பணத்தை தரவேண்டும். இல்லை மீண்டும் எனது காரை என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று சிவகுமாரிடம் கேட்டார்.

அதற்கு அவர், காரை வாடகைக்கு விட்ட நிறுவனத்தில் பிரச்சினை என்று கூறி, மற்றொரு காரை அவரிடம் கொடுத்து, “உங்கள் கார் வரும் வரை இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்றார்.

இதனால் சந்தேகம் அடைந்த ஜாகிர்பாஷா, இதுபற்றி சிட்லப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை பிடித்து விசாரித்தனர்.


விசாரணையில் அவர், ஜாகிர்பாஷா காரின் ஆவணங்களை அடமானம் வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் அவர், இதுபோல் இணைய தளங்களில் கார் விற்பனைக்கு என்று வரும் விளம்பரங்களை பார்த்து விட்டு அதன் உரிமையாளர்களிடம், மாதம் தோறும் பணம் தருவதாக கூறி காரை வாடகைக்கு எடுத்து பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சிவகுமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ஒரு காரை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவர் இதுபோல் எத்தனை பேரிடம் மோசடியில் ஈடுபட்டு உள்ளார்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்