கிழக்கு கடற்கரை சாலையை 6 வழி சாலையாக மாற்ற நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு

மரக்காணம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-07-08 22:45 GMT

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மரக்காணம், மண்டவாய், கழிக்குப்பம், ஆலப்பாக்கம், ஆட்சிக்காடு, பனிச்சமேடு, கீழ்பேட்டை, அனுமந்தை, செட்டிக்குப்பம், செய்யாங்குப்பம், செட்டிநகர், கூனிமேடு, ரங்கநாதபுரம், மஞ்சங்குப்பம், அனிச்சங்குப்பம், கீழ்புத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் மூலம் அப்போது நூற்றுக்கனக்கானோர் தங்களது வீடுகளையும் இழந்தனர். ஒரு சிலர் தங்களிடம் இருந்த வீடு மற்றும் நிலங்களை இழந்து அகதிகள்போல் தவித்து வேறு வழியில்லாமல் சென்னை, புதுவை போன்ற பெரு நகரங்களுக்கு வேலை தேடிச்சென்று குடியேறினர்.

ஆனால் அரசு அந்த இடத்தில் இதுவரையில் இரண்டு வழிச்சாலை மட்டுமே அமைத்துள்ளது. மற்ற இடங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்நிலையில் தற்போது அதே பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக விரிவுப்படுத்த உள்ளதாக கூறி பொது மக்கள் மற்றும் விவசாயிகளிடம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அரசு அதிகாரிகள் தன்னிச்சையாகவே நிலங்களை அளவீடு செய்து அந்த இடங்களில் நில அளவு கற்களையும் பதித்து வருகின்றனர்.

அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் நில அளவை செய்யும் அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்கள் மேல் அதிகாரிகள் கூறினார்கள் நாங்கள் அளவீடு செய்கிறோம் என்று கூறுகின்றனர்.

அதனைத்தொடர்ந்து மரக்காணம் பகுதியில் இருக்கும் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் காவல் துறை, வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் கேட்டால் அவர்களும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்கின்றனர். தாசில்தாரிடம் சென்று கேட்டால் அவரும் எதுவும் தெரியாது என்று கூறுகிறார்.

அதனால் அச்சம் அடைந்துள்ள அப்பகுதி மக்கள் ‘‘நிலம் இழப்போர் மக்கள் கூட்டமைப்பு’’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்த கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை பகுதியில் நடந்தது. கூட்டத்தின் முடிவில் அனுமந்தை கிராமத்தில் சாலையோரம் அமர்ந்து அந்த கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் வீடு மற்றும் நில பத்திரங்களை கையில் பிடித்து அரசுக்கு நாங்கள் நிலம் தர மாட்டோம் என கோ‌ஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–

இப்பகுதியில் ஏற்கனவே 4 வழி சாலை அமைக்க அரசு நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. இதில் 2 வழிச்சாலை போக மீதமுள்ள இடத்தில் 4 வழி சாலை அமைத்தால் தற்போது புதியதாக நிலம் எடுக்கவேண்டிய அவசியமில்லை.

பொது மக்களின் கருத்தை கேட்காமல் தற்போது அளவீடு செய்யும் இடத்தை கையகப்படுத்தினால் மீண்டும் ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கோவில்கள், ஏரிகள், குளங்கள் அழியும் அபாய நிலை உள்ளது. மேலும் நிலங்களை இழப்போர் வேறு வழியில்லாமல் தங்களது சொந்த கிராமங்களிலேயே அகதிகளாக வாழும் அவல நிலையும் ஏற்படும்.

இந்த திட்டத்தின் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வேறு எங்கு செல்லமுடியும்? இதற்கு அரசு கொடுக்கும் சொற்ப இழப்பீட்டை வைத்து காலம் முழுக்க வாழமுடியுமா? எனவே பொது மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் இந்த 6 வழிச்சாலை திட்டத்திற்கு பதில் 4 வழி சாலை திட்டத்தை அரசு செயல்படுத்தவேண்டும் இல்லை என்றால் அரசுக்கு எதிராக பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்