வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2018-07-09 00:18 GMT
ஜூலை.9-

‘மலைகளின் இளவரசி’ என வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான சீதோஷ்ண நிலை நிலவும். இதை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களைகட்டும்.

தற்போது கொடைக்கானலில் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் இதமான சூழ்நிலை நிலவுகிறது. அதுமட்டுமின்றி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்களும் தற்போது பூத்து குலுங்குகின்றன. இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

நேற்று வார விடுமுறையையொட்டி மோட்டார் சைக்கிள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போதுமான போலீசார் இல்லாததால் நகரின் போக்குவரத்தை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களே வாகன டிரைவர்களின் உதவியுடன் போக்குவரத்தை சீரமைத்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி சுற்றுலா இடங்கள் களைகட்டியது. பிரையண்ட் பூங்கா, பைன் மரக்காடுகள், மோயர்பாயிண்ட், பில்லர்ராக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அவ்வப்போது மேகக்கூட்டங்கள் தரையிறங்கி சென்றன.

இதுதவிர படகுசவாரி, குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்வதிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததின் காரணமாக அதனை நம்பியிருந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்