குன்னூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்திருந்த தொழில் அதிபரின் வீட்டின் கேட் உடைக்கப்பட்டதால் பரபரப்பு

குன்னூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்திருந்த தொழில் அதிபரின் வீட்டின் கேட் உடைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-09 22:30 GMT

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ராஜன் (வயது 55), தொழில் அதிபர். இவர் தொழில் தொடங்க பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி இருந்தார். ஆனால் கடனை திரும்ப செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சில வங்கிகளில் கடன் வாங்கும் போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த 2012–ம் ஆண்டில் இருந்து 2015–ம் ஆண்டு வரை ஊட்டி தனியார் வங்கியில் கடன்கள் வழங்கப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வங்கி மேலாளராக இருந்த சிவக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதில், குன்னூர் மற்றும் ஊட்டியை சேர்ந்த 58 விவசாயிகளுக்கு பசுமைக்குடில் அமைத்து தருவதாக கூறி அவர்களது பெயரில் வங்கியில் கடன் பெற்று ரூ.15 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில் கடந்த 7–ந் தேதி ஊட்டி எட்டின்ஸ் சாலையில் உள்ள ராஜனுக்கு சொந்தமான வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அதன் பின்னர் குன்னூரில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் பிற கட்டிடங்களுக்கும் ‘சீல்’ வைத்தனர். இதனால் ராஜன் தலைமறைவானார். இந்த நிலையில் குன்னூர் பெட்போர்டு பகுதியில் சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்திருந்த ராஜனுக்கு சொந்தமான வீட்டின் கேட் நேற்று மாலை உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உள்ளூர் போலீசாருக்கும், சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தொழில் அதிபரின் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை ராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் எடுத்து சென்றனரா? அல்லது மர்ம ஆசாமிகள் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்து சென்றனரா? என்று போலீசார் மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்