பெங்களூரு கிரிக்கெட் மைதான குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதிகள் 3 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை - பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதான குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2018-07-09 23:30 GMT
பெங்களூரு,

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந் தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தின் அருகே 2 குண்டுகள் வெடித்தன. இதில் 15 பேர் காயமடைந்தனர். மேலும், மைதானத்தை சுற்றி சோதனை நடத்திய போலீசார் 3 வெடிகுண்டுகளை கைப்பற்றி செயலிழக்க செய்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு இந்திய முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று கொண்டது.

குண்டுவெடிப்பு வழக்கு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பயங்கரவாதிகளான யாசீன் பட்கல் உள்பட 14 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. குண்டுவெடிப்பு தொடர்பாக யாசீன் பட்கல் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், யாசீன் பட்கல் திகார் சிறையிலும், கவுகார் அஜிஸ் கோமணி, முகமது தாசிக் அஞ்சும், கமல்ஹாசன் மற்றும் முகமது காபீல் அக்தர் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்ள வேண்டும் என்று கவுகார் அஜிஸ் கோமணி, முகமது தாசிக் அஞ்சும், கமல் ஹாசன், முகமது காபீல் அக்தர் ஆகியோர் பெங்களூரு செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, வழக்கில் தொடர்புடைய கவுகார் அஜிஸ் கோமணி, கமல்ஹாசன், முகமது காபீல் அக்தர் ஆகிய 3 பேரும் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக கூறினர்.

அதன்பேரில் கடந்த 4-ந் தேதி அவர்கள் 3 பேரும் பெங்களூரு தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சித்தலிங்க பிரபு முன்பு ஆஜராகி குண்டுவெடிப்பில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டு, வாக்குமூலம் அளித்தனர். அப்போது, இந்திய முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர் களுக்கு அவர்கள் உதவி செய்ததாக தெரிவித்தனர். வாக்குமூலத்தை பெற்று கொண்ட நீதிபதி, தீர்ப்பை வருகிற 9-ந் தேதிக்கு(அதாவது நேற்று) ஒத்திவைத்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் பயங்கரவாதிகளான கவுகார் அஜிஸ் கோமணி, கமல்ஹாசன், முகமது காபீல் அக்தர் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து குண்டுவெடிப்பில் தொடர்பு கொண்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்த 3 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சித்தலிங்க பிரபு உத்தரவிட்டார்.

மேலும், முகமது காபீல் அக்தருக்கு ரூ.10 லட்சமும், கவுகார் அஜிஸ் கோமணி, கமல்ஹாசன் ஆகியோருக்கு தலா ரூ.7½ லட்சமும் அபராதமாக நீதிபதி சித்தலிங்க பிரபு விதித்தார். அதனைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்