மதுரை ஐகோர்ட்டு உத்தரவு: தூத்துக்குடி பேராயருக்கு தனிநீதிபதி விதித்த தண்டனைக்கு இடைக்கால தடை

தூத்துக்குடி பேராயருக்கு தனிநீதிபதி விதித்த தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு டிவி‌ஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-07-09 22:45 GMT

மதுரை,

தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டான்லி வேதமாணிக்கம், துரைராஜ், அரோன், ஆனந்தராஜ் ஆகிய 4 பேரும் மதுரை ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். அதில், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயராக தேவசகாயம் உள்ளார். பொருளாளராக மோகன்அருமைநாயகம் உள்ளார். கடந்த 2012–ம் ஆண்டு தூத்துக்குடி திருமண்டல சபைக்குழு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் எங்களுக்கு ஓட்டுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அதை விசாரித்த ஐகோர்ட்டு, எங்களுக்கு ஓட்டுரிமை வழங்கி உத்தரவிட்டது. அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை. எனவே திருமண்டல பேராயர், பொருளாளர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதற்கிடையே திருமண்டல சபைக்குழு தேர்தல் நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதையும் மதிக்காமல் தேர்தல் நடத்தியது பற்றியும் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த 2 வழக்குகளையும் நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்து, கடந்த 4–ந்தேதி பிறப்பித்த உத்தரவில், ‘‘தூத்துக்குடி திருமண்டல சபைக்குழுவுக்கு நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களையும் வாக்காளர்கள் பட்டியலில் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும். பேராயர் தேவசகாயம், பொருளாளர் மோகன்அருமைநாயகம் ஆகியோர் கோர்ட்டு உத்தரவை அவமதித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. அவர்களின் மன்னிப்பை ஏற்க முடியாது. எனவே அவர்களுக்கு தலா 2 வாரம் ‘சிவில் ஜெயில்’ தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை 2 வாரத்தில் தலைமை நீதிபதி நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

பின்னர் எதிர்மனுதாரர்கள் சார்பில் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அவர்கள் மீதான தண்டனையை 2 வாரத்துக்கு நிறுத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில் தங்கள் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பேராயர் தேவசகாயம், தூத்துக்குடி திருமண்டல பொருளாளர் மோகன்அருமைநாயகம் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றவும், அபராத தொகை செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்