மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடத்தில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை, மத்திய சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டுமான நிறுவன அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

Update: 2018-07-09 23:30 GMT

மதுரை,

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள மத்திய அரசின் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளுக்கான எச்.எஸ்.சி.சி. நிறுவனத்தின் தலைமை என்ஜினீயர் ரஞ்சித்குமார் தலைமையில் ஸ்ரீகுமார், திருவனந்தபுரம் பிரிவு தலைமை என்ஜினீயர் லதா, கட்டிடக்கலை நிபுணர்கள் ரத்தினாச்சலம், அனிதாஸ்ரீகுமாரி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று தோப்பூர் வந்தனர். அவர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தின பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தின் வரைபடம், கட்டுமான பணிகள் நடக்க உள்ள இடம், மொத்த பரப்பளவுக்கான எல்லை, இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் பெட்ரோல் குழாய்கள் என அனைத்தையும் பார்வையிட்டனர். இது குறித்த அறிக்கையை 3 நாட்களுக்குள் மத்திய அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாக, அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது, மதுரை ஆர்.டி.ஓ. அரவிந்தன், மதுரை மருத்துவக்கல்லூரி டீன் மருதுபாண்டியன், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பெட்ரோல் குழாய் திட்ட மேலாளர் சீனிவாசன், பொதுப்பணித்துறை நிர்வாக என்ஜினீயர் செல்வராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வு குறித்து மதுரை மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் மருதுபாண்டியன் கூறியதாவது:–

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எச்.எஸ்.சி.சி. நிறுவனத்தின் சென்னை மற்றும் கேரள பிரிவு அதிகாரிகள் குழுவினர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இதற்காக அனைத்து துறை அதிகாரிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு இங்கு வந்துள்ளோம். எய்ம்ஸ் அமைவிடம் குறித்த தகவல்களை சேகரித்து, அதனை 3 நாட்களுக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பித்து விடுவர்.

எய்ம்ஸ் அமையும் இடம் குறித்து கட்டுமான பணிக்குழுவினர் முழு திருப்தியடைந்துள்ளனர். எனவே கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட உள்ளன.

எய்ம்ஸ் அமைவிடத்தில் ஓரிரு நாட்களில் மண் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இந்த குழுவின் அறிக்கையை தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகள் இந்த நிறுவனத்தின் மேற்பார்வையில் தான் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்