தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சாலைமறியல் 87 பேர் கைது

நாமக்கல்லில் 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 87 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-09 22:45 GMT
நாமக்கல்,

நாமக்கல்லில் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரபிரசாத் தலைமை தாங்கினார். துணை தலைவர் பாஸ்கர் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் லோகமணிகண்டன் போராட்டத்தை தொடக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பால விநாயகம் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது ஊராட்சி செயலாளர்களுக்கு, பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியத்தை வழங்க அரசாணை வெளியிட கோரியும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தியும் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். மேலும் இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த உத்தரவிட கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அதேபோல் அரசாணை எண் 56-ஐ கைவிட வேண்டும் என்றும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு என தனி கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 87 பேரை நல்லிப்பாளையம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். 

மேலும் செய்திகள்