மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மறியல் 180 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 180 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-09 22:45 GMT
தர்மபுரி,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். அதற்கான அரசாணையை உடனடியாக தமிழகஅரசு வெளியிட வேண்டும். ஊரகவளர்ச்சித்துறையில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டக்குழுவினர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 180 பேரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்