அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்கக்கோரி ரேஷன் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்

அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்கக்கோரி ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-09 22:45 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், இளவரசன், இணைச் செயலாளர்கள் திருமேனி, சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரசார செயலாளர் அரசு வரவேற்றார்.

இதில் மாநில தலைவர் ராமச்சந்திரன், மாநில இணைச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், பொது வினியோகத்திட்டத்திற்கென தனித்துறை அமைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க வேண்டும். பொது வினியோகத் திட்ட பணிகளை 100 சதவீதம் கணினி மயமாக்க வேண்டும்.

நியாயவிலைக்கடைகளுக்கு சொந்த கட்டிடம் கழிவறை வசதியுடன் கட்ட வேண்டும். சரியான எடையில் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யாமல் ஆய்வு நடத்தி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும். அனைவருக்கும் எந்தவித வேறுபாடு இன்றி 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும்.

பணியாளர்களிடம் லாரி வாடகை, ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி, மின் கட்டணம் போன்றவற்றை வசூலிக்கக்கூடாது. அரசு பணியாளர்களுக்கு வழங்குவதை போல மாதம்தோறும் மருத்துவப்படியை ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் நிர்வாகிகள் அறிவழகன், அப்துல்காதர், அன்பழகன், ரவி, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார். முன்னதாக பணியாளர்கள் யாரும் வேலைக்கு செல்லாமல் ரேஷன் கடைகளையும் பூட்டியதால் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்