வேளாங்கண்ணி அருகே டிரைவர் கொலை: 5 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளிகள் 5 பேர் கைது

வேளாங்கண்ணி அருகே டிரைவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டியதாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2018-07-09 22:15 GMT
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் ராஜா என்ற ரவி சங்கர்(வயது 40). கார் டிரைவரான இவர், கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி வேளாங்கண்ணி அருகில் கடுவையாற்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

இதுகுறித்து வேளாங் கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்று விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காமேஸ்வரம் கள்ளர் நகர் பகுதியை சேர்ந்த சுப்பையன் மகன் கார்த்தி என்ற கார்த்திகேயன்(வயது 32), சசிகுமார்(42), பிரதாபராமபுரம் நடுத்தெருவை சேர்ந்த ஆறுமுகம்(55), பிரதாபராமபுரம் வடக்கு தெருவை சேர்ந்த தனபால்(48) ஆகிய 4 பேரும் திருப்பூண்டி கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் முன்பு சரண் அடைந்தனர்.

பின்னர் அவர்கள், ராஜாவை நாங்கள் தான் கொலை செய்தோம். எங்களுடன் காமேஸ்வரம் ஆனியன் தோப்பு பகுதியை சேர்ந்த பிரான்சிஸ், கள்ளர் நகர் பகுதியை சேர்ந்த விஜி என்ற விஜேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர் என கூறினர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிகள், வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 4 பேரையும் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து பிரான்ஸிசையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய விஜி என்ற விஜேந்திரன் தற்போது வெளிநாட்டில் உள்ளார்.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கார்த்தி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியதாவது:-

நாங்கள் 6 பேரும் நண்பர்கள். ஆறுமுகத்திடம், ராஜா டிரைவராக வேலைபார்த்து வந்தார். ராஜா ஆறுமுகம் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதில் ஆறுமுகம் மனைவிக்கும், ராஜாவிற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ஆறுமுகம் இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் தங்களது தொடர்பை நிறுத்தவில்லை.

இதனால் ராஜாவை ஆறுமுகம் வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். அதன் பிறகும் இவர்களின் கள்ளத்தொடர்பு நீடித்தது. இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் எங்களிடம் வந்து இந்த தகவலை தெரிவித்தார். இதனால் ராஜாவை கொலை செய்ய திட்டமிட்டோம்.

சம்பவத்தன்று ஆறுமுகம் வெளியூர் சென்று விட்டார். அன்று இரவு ராஜாவை காமேஸ்வரம் வரச்சொன்னோம். அங்கு ராஜாவுடன் சேர்ந்து நாங்கள் அனைவரும் மது அருந்தினோம். பின்னர் இரவு 9 மணி அளவில் ராஜா வீட்டிற்கு திரும்பும்போது, நாங்கள் மறைத்து வைத்திருந்த கோடரி மற்றும் உருட்டு கட்டையால் தாக்கினோம். இதில் சம்பவ இடத்திலேயே ராஜா இறந்தார். பின்னர் அவரது உடலை லோடு வேன் மூலம் ஏற்றி வேளாங்கண்ணி கடுவையாற்றில் விசிவிட்டு சென்றோம். இவ்வாறு கார்த்தி தனது வாக்கு மூலத்தில் கூறி உள்ளார்.

கைதான 5 பேரையும் போலீசார், நாகப்பட்டினம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு மணிகண்ட ராஜா உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்