கபினியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கபினி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், நேற்று இரவு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

Update: 2018-07-09 23:00 GMT
மேட்டூர்,

கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு அதிகளவில் தண்ணீர் வருகிறது. இதே போன்று கர்நாடக மாநிலத்தில் மழை பெய்யும் நேரங்களில் கிருஷ்ணராஜசாகர் அணை உள்பட மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவில் மழை தீவிரம் அடைந்ததால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏற்கனவே இந்த அணை தன் முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் தமிழகம்-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்து அடைகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 63.72 அடியாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கபினியில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் ஒகேனக்கல் வந்தடைந்தது. மாலையில் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறை கடந்து கோட்டையூர், பண்ணவாடி வழியாக நேற்று இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,533 கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து இரவில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர வாய்ப்பு உள்ளது. மேட்டூர் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அணையில் இருந்து விரைவில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். 

மேலும் செய்திகள்