திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சாலை மறியல் போராட்டம்

திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 298 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-07-09 23:27 GMT
திருவண்ணாமலை,

ஜூலை.


தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றும் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், ஊராட்சி செயலாளர் அலுவலகங்களில் அலுவலர்கள், பணியாளர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. குடிநீர், மின் விளக்கு போன்ற பிரச்சினைக்களுக்காக மனு அளிக்க அலுவலகம் வரும் பொதுமக்கள், அலுவலர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. அதையொட்டி திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணைத்தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.

இதில் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்கி அரசாணை வெளியிட வேண்டும். கணினி உதவியாளர்கள், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினரை கைது செய்தனர். இதில் 23 பெண்கள் உள்பட 298 பேர் கைது செய்யப்பட்டனர். 

மேலும் செய்திகள்