குறைதீர்வு கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பிரபல ரவுடி

மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு கொடுப்பதற்காக பிரபல ரவுடி வசூர்ராஜா நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் அளித்த மனுவில் தன் மீது போலீசார் பொய்வழக்கு போடுவதாக கூறிஉள்ளார்.

Update: 2018-07-09 23:49 GMT
வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு, கல்விக்கடன் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றை சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக பிரபல ரவுடியான வேலூரை அடுத்த புதுவசூரை சேர்ந்த வசூர் ராஜா (வயது 33) வந்திருந்தார். அவருடன் அவரது வக்கீல்களும் வந்திருந்தனர். வசூர்ராஜா மீது கொலை, ஆள்கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

அப்போது குறைதீர்வு கூட்ட அரங்கில் கலெக்டர் இல்லை. அவருக்கு பதிலாக பொதுமக்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் வசூர்ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையனிடம் தனது மனுவை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-


என் மீது பல பொய்யான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் என்மீது சந்தேகத்தின் பேரில் பொய்யான வழக்கை போட்டு போலீசார் என்னை ஜெயிலில் அடைத்தனர். தற்போது ஜாமீனில் வந்துள்ளேன். நான் இனி வரும் காலங்களில் எந்தவித குற்றசெயல்களிலும் ஈடுபட மாட்டேன். என்மேல் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தவறாமல் ஆஜராகி போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்.

குற்றப்பின்னணி உள்ள நபர்களோடு தொடர்பு வைத்து கொள்ள மாட்டேன். எந்தவித தவறும் செய்ய மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். அப்படி ஏதாவது குற்ற பின்னணி உள்ள நபர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டால் என் மீது எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறேன். மேலும் என் மீது சந்தேகத்தின்பேரில் வழக்கு பதிவதை தவிர்க்க போலீசாருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் அவர் மனுகொடுத்தார்.

ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களில் 15-க்கும் மேற்பட்டவர்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடந்த 1980-ம் ஆண்டு பெல் நிறுவனத்திற்காக எங்களுடைய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுடைய நிலங்களை அதிகாரிகள் கையகப்படுத்தினர். நிலம் கொடுத்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என்று கூறினர். ஆனால் சிலருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு இன்னும் வேலை வழங்கப்படவில்லை. பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெல் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.

வேலூர் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில், “அரியூர் மலைக்கோடி பகுதியில் உள்ள அண்ணாநகர், விஸ்வநாத நகர், அவுசிங்போர்டு, நரிக்குறவர் காலனி, நம்பிராஜபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இந்த பகுதிகள் 57-வது வார்டில் இருந்தது. தற்போது 59-வது வார்டில் சேர்க்கப்போவதாக அறிகிறோம்.

இதுகுறித்து கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு மனு கொடுத்தோம். ஆனாலும் எங்கள் பகுதியை 59-வது வார்டில் சேர்ப்பதாக கூறுகிறார். இதனை தவிர்த்து எங்கள் பகுதியை 57-வது வார்டிலேயே சேர்க்கவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்