ஏலகிரிமலையில் பயிர்களை நாசப்படுத்தி காட்டுயானை அட்டகாசம்

ஏலகிரிமலை பகுதியில் பயிர்களை நாசப்படுத்தி காட்டு யானை அட்டகாசம் செய்தது. வனத்துறையினர் காட்டு யானையை விரட்டினர்.

Update: 2018-07-09 23:56 GMT
ஜோலார்பேட்டை,

ஆலங்காயம் வனச்சரகத்திற்கு உட்பட்ட லட்சுமிபுரம் வனப்பகுதியில் இருந்து ஏலகிரிமலைக்கு ஒற்றை ஆண் காட்டுயானை கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தது. இந்த யானை அந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்தது. இந்த யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியில் இருந்தனர். இதையடுத்து திருப்பத்தூர் வனத்துறையினர் அங்கு சென்று முகாமிட்டு யானையை தீவிரமாக கண்காணித்து, யானையை விரட்ட நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் வனப்பகுதிகளில் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று தண்டோரா போட்டு எச்சரிக்கை செய்தனர்.

இந்த நிலையில் ஏலகிரிமலை மங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பயிர்கள், பலா மரத்தை நாசப்படுத்தியதோடு வீட்டின் மேற்கூரையையும் யானை சேதப்படுத்தியது. ஜெயராமன் மற்றும் அவரது மனைவி அருகில் உள்ள தங்களின் மகன் வீட்டில் தங்கி இருந்ததால் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காட்டுயானையை அங்கிருந்து விரட்டினர். மேலும் யானை காட்டுக்குள் சென்றுவிட்டதால் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்