100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-10 23:00 GMT
நாகர்கோவில்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இத்திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 100 நாட்களும் வேலை வழங்கப்படுவது இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் வேலை பார்த்த பலருக்கு சம்பளம் சரியாக வழங்கப்படுவது இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளும் வந்திருந்தனர். அந்த வகையில் 800–க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.

பின்னர் அனைவரும் “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் அடிப்படையில் அனைத்து ஊராட்சிகளிலும் வேலைவாய்ப்பு அட்டை பெற்ற தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். அரசு அறிவித்த தினக்கூலி ரூ.224–ஐ குறைக்காமல் வழங்குவதோடு படிப்படியாக தினக்கூலியை ரூ.400 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்“ என்று வலியுறுத்தி தனித்தனியாக கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளிப்பதற்காக சென்றனர்.

ஆனால் கலெக்டர் இல்லாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் கலெக்டரிடம் தான் மனு அளிப்போம் என்று கூறி பொதுமக்கள் அனைவரும் காலை 11 மணி அளவில் திடீரென அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். முன்னதாக அனைவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த மனுவை கையில் உயர்த்தி பிடித்தவாறு கோ‌ஷங்கள் எழுப்பினர். போராட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கண்ணன், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லாசர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏராளமானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகம் முன் பகுதியில் நேற்று நிற்க கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்–இன்ஸ்பெக்டர் மோகனஅய்யர் தலைமையிலான போலீசார் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. தொடர்ந்து கோ‌ஷங்களை எழுப்பியவாறே முற்றுகை போராட்டம் நடந்தது. 

போராட்டம் தொடங்கி சுமார் 1½ மணி நேரத்துக்கு பிறகு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கரன், துணை சூப்பிரண்டு இளங்கோவன் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை பார்த்ததும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், நம்மிடம் மனு வாங்கத்தான் உயர் அதிகாரி வருகிறார் என்று நினைத்து வேகமாக வந்து அவரிடம் மனு அளித்தனர்.

ஆனால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கரன், இதுதொடர்பாக மனு வாங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறினார். அதன்பிறகு போராட்டத்தை நடத்திய சிலரை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யாவிடம் அழைத்து சென்றார். அங்கு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மனு அளிக்க வந்தவர்களிடம் கலெக்டர் அலுவலக பணியாளர்கள் மனுக்களை வாங்கினர்.

அதைத் தொடர்ந்து மெல்ல மெல்ல கூட்டம் கலைந்து சென்றது. முற்றுகை போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று அதிகாரிகளின் வாகனம் உள்பட எந்த வாகனங்களாலும் உள்ளே செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் முன் உள்ள நுழைவு வாயில் வழியாக வாகனங்கள் சென்றன.

மேலும் செய்திகள்