நிலத்தகராறில் அண்ணன் மனைவியை அடித்துக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

திருப்பத்தூர் அருகே அண்ணன் மனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளிக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2018-07-10 21:30 GMT
வேலூர், 

இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

திருப்பத்தூர் தாலுகா தண்டுகானூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மகன்கள் சண்முகம், ரஜினி (வயது 38). சண்முகத்தின் மனைவி செல்வி (35), மகன் கஜேந்திரன் (10). ரஜினி கூலி வேலை செய்து வந்தார். அண்ணன், தம்பிக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதியன்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ரஜினி இரும்பு குழாயால் அண்ணன் சண்முகத்தின் மனைவி செல்வியின் தலையில் அடித்துள்ளார். அப்போது அருகில் இருந்த செல்வியின் மகன் கஜேந்திரனையும் தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

படுகாயம் அடைந்த கஜேந்திரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றான். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜினியை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு வழக்கறிஞர் லட்சுமிபிரியா இந்த வழக்கில் ஆஜரானார்.

நீதிபதி செல்வம் வழக்கை விசாரித்து ரஜினிக்கு கொலை வழக்கில் (302) ஆயுள் தண்டனையும், கொலை முயற்சி வழக்கில் (307) 7 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 2 தண்டனையையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்