மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-07-10 22:45 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேல் சிந்தாமணியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 35). மாற்றுத்திறனாளியான இவர், டி.வி. மற்றும் ரேடியோ பழுதுபார்க்கும் தொழில் செய்து வருகிறார். தமிழக அரசு வழங்கும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்க கேட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்திலும் பலமுறை மனு கொடுத்துள்ளார். ஆனால் அவரது மனு மீது விசாரணை நடத்திய அதிகாரிகள், அவருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மாற்றுத்திறனாளி கோபிநாத் நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் தனக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும், இதனால் வாழ விருப்பம் இல்லாமல் தீக்குளித்து சாகப்போகிறேன் எனக்கூறி பையில் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதேசமயம், இது தொடர்பாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்கு வந்து மாற்றுத்திறனாளி கோபிநாத்திடம் விசாரணை நடத்தினார். அப்போது, மனு அளித்து பதிவு செய்துள்ள நபர்களின் பட்டியலில் உள்ளவாறு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனால் எவ்வித முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

ஆனால் அதை கேட்க மறுத்த கோபிநாத், பலமுறை மனு கொடுத்தும் இதுவரை மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கவில்லை எனக்கூறி அதிகாரி தங்கமணியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அவரை போலீசார் சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி கோபிநாத் கூறுகையில், இரண்டு கால்கள் செயலிழந்தநிலையில் டி.வி. மற்றும் ரேடியோ பழுது பார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். வங்கியில் கடன் உதவி பெற்று 3 சக்கர மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி வருகிறேன். அது அடிக்கடி பழுதாகி விடுவதோடு, தவணை தொகையும் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றேன். எனவே அரசு சார்பில் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கக்கோரி பலமுறை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை. விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து வருகிறார்கள். எனவே, வாழ விருப்பம் இல்லாததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தேன். ஆனால் போலீசார் தடுத்துவிட்டார்கள். எனது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்