குன்னூரில் உள்வாடகைக்கு விட்ட தனியார் தங்கும் விடுதிக்கு சீல் வைப்பு

குன்னூரில் உள்வாடகைக்கு விடப்பட்ட தனியார் தங்கும் விடுதிக்கு நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

Update: 2018-07-10 23:00 GMT

குன்னூர்,

குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான அறிஞர் அண்ணா உள்ளூர் பஸ் நிலையத்தில் உள்ள முதல் தளத்தில் தங்கும் விடுதிகள் உள்ளன. இதனை குன்னூர் நகராட்சி தனியாருக்கு குத்தகைக்கு விட்டு உள்ளது. இதனை குத்தகைக்கு எடுத்த குத்தகைதாரர் தங்கும் விடுதியாக நடத்தாமல் அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு உள்வாடகைக்கு விட்டு வந்து உள்ளார்.

இந்த நிலையில் குத்தகைக்கு எடுத்தவர் நகராட்சிக்கு வாடகை பாக்கியும் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நகராட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதற்கிடையே குன்னூர் நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

இதையடுத்து, குன்னூர் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி அந்த தங்கும் விடுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகள், அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்வாடகைக்கு விடப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த தங்கும் விடுதிக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் 25 கடைகள், அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. இதில் சிலருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு 3 நாட்களுக்குள் காலி செய்ய காலக்கெடு வழங்கப்பட்டது. மேலும் அங்கிருந்து பொருட்கள் எல்லாம் நகராட்சி வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டது.

இந்த சம்பவத்தால் குன்னூர் பஸ் நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்