மசினகுடி–தெப்பக்காடு நெடுஞ்சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

தொடர் மழையால் மசினகுடி–தெப்பக்காடு நெடுஞ்சாலையில் மரம் விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

Update: 2018-07-10 22:15 GMT

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கூடலூர், மசினகுடி, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பருவ மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நேற்று காலை மசினகுடியில் இருந்து தெப்பக்காடுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் மரம் ஒன்று விழுந்தது.

இதனால் மசினகுடி–தெப்பக்காடு சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் மசினகுடி போலீசார், வனத்துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மசினகுடி லாரி ஓட்டுனர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் அந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது. அதன் பின்னர் அந்த சாலையில் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

மசினகுடி– தெப்பக்காடு சாலையில் இனிவரும் நாட்களில் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க அப்பகுதியில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து வெட்டி அகற்ற முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்